செய்திகள்

முதல்வர் நாற்காலியில் ரஜினி அமர்வது உறுதி - தமிழருவி மணியன் பேட்டி

Published On 2018-03-25 05:48 GMT   |   Update On 2018-03-25 05:48 GMT
மக்கள் இயக்கம் கோட்டையை பிடித்து முதல்வர் நாற்காலியில் ரஜினி அமர்வது உறுதி என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #Tamil #TamilaruviManian
வேலூர்:

வேலூர் அருகே பள்ளிகொண்டாசாவடி பகுதியில் உள்ள காந்தி பூங்கா மற்றும் காந்தி சிலையை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் புனரமைத்துள்ளனர். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

இதில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சோளிங்கர் என்.ரவி கலந்துக் கொண்டனர்.

காந்தி சிலையை திறந்து வைத்து தமிழருவி மணியன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் மாற்று அரசியல் வரவேண்டும். திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளாக தமிழகத்தை அழித்துவிட்டனர். இந்த 2 வி‌ஷயங்களுக்காக தான் ரஜினி அரசியலில் இறங்கி உள்ளார்.

விமர்சனம் வைக்கின்ற அரசியல்வாதிகளுக்கு விளக்கம் அளிக்கின்ற நோக்கத்தில் இல்லை. மக்களுக்கு நன்மை செய்வதே நோக்கம். ரஜினியை முதல்வர் ஆக்கினால் கண்டிப்பாக மக்கள் ஆட்சி கொண்டு வருவார். இந்தியாவிலேயே ஒரு முன் மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்றுவார்.

நிச்சயமாக ரஜினி மக்கள் இயக்கம் கோட்டையை பிடிப்பது உறுதி. முதல்வர் நாற்காலியில் ரஜினி அமர்வதும் உறுதி. மே மாதம் 20-ந் தேதி கோவை மாநகரில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ரஜினி முதல்வராக வர வேண்டும் என்று முன்மொழியும் மாநாடு நடக்கிறது. அது, முக்கடல் கூடும் சங்கமாக இருக்க போகிறது என்றார்.

ரஜினி அண்ணன் சத்திய நாராயணராவ் நிருபர்களிடம் கூறுகையில், இன்னும் 11 மாவட்டங்களின் நிர்வாக பட்டியல் அறிவிக்கவில்லை. அவற்றை அறிவித்த பிறகு முறையாக கட்சியின் பெயரை ரஜினியே அறிவிப்பார். அதற்கான பணி நடந்து கொண்டு வருகிறது. ரஜினி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #TamilaruviManian
Tags:    

Similar News