செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்- தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Published On 2018-05-22 04:03 GMT   |   Update On 2018-05-22 04:03 GMT
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்டா மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளாக போதிய தண்ணீர் காவிரியில் வராததால் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. இதே ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளும் பல நேரங்களில் வறட்சியினால் பாதிக்கப்பட்டு மிகுந்த நாசத்திற்கும், நஷ்டத்திற்கும் டெல்டா மாவட்ட மக்கள் ஆளாகியுள்ளார்கள்.

வழக்கம்போல் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா என பெரும் கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாங்கள் நடத்திய சட்டப் போராட்டத்தின் மூலம் ஆணையத்தை பெற்றுவிட்டோம் எனக் கூறி தமிழக மக்களை ஏமாற்றுவதை கைவிட்டு, உடனடியாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு தேவையானால் இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வற்புறுத்தி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News