செய்திகள்
கார்த்திக்

சோழவந்தானில் போலீஸ் தேர்வு எழுதிய வாலிபர் மர்மமரணம்

Published On 2019-08-27 04:42 GMT   |   Update On 2019-08-27 04:42 GMT
சோழவந்தானில் போலீஸ் எழுத்து தேர்வில் பங்கேற்ற வாலிபர் கால்வாய் படுகையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் கார்த்திக் (வயது 23). அஞ்சல் வழியில் பி.ஏ. படித்து வந்தார்.

இவரது தங்கைக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க உள்ளது. அதற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் கார்த்திக் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் காவலர் எழுத்து தேர்விலும் இவர் பங்கேற்றார்.

இந்த நிலையில் தேனூர் கால்வாய் படுகை அணை திறப்பு பகுதியின் கீழே கார்த்திக் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடம் சென்று உடலைப்பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து சோழவந்தான் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கார்த்திக் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் கழுத்து மற்றும் நெற்றி பகுதியில் கல் குத்தியதற்கான அடையாளங்கள் உள்ளன.

அணை திறப்பு பகுதியில் இருந்து அவர், கால்வாயில் விழுந்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஆனால் அவர் கீழே குதித்து தற்கொலை செய்தாரா? தவறி விழுந்தாரா? அல்லது யாரேனும் தள்ளி விட்டார்களா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் அடிக்கடி தேனூர் கால்வாய் படுகை பகுதியில் அமர்ந்து பேசி பொழுதை கழிப்பார்களாம். நேற்று கார்த்திக்குடன் இங்கு வந்தது யார் என்பது தெரியவில்லை.

கார்த்திக்கின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் கடைசியாக ஒரு நண்பரிடம் பேசியிருப்பது தெரியவந்தது. அந்த எண்ணை போலீசார் தொடர்பு கொண்டபோது, யாரும் எடுக்கவில்லை.

எனவே கார்த்திக் சாவில் மர்மம் நீடித்து வருகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News