செய்திகள்
சந்திர கிரகணம் - விளக்கப்படம்

நாளை ஓநாய் சந்திர கிரகணம் -வெறும் கண்ணால் பார்க்கலாம்

Published On 2020-01-09 07:57 GMT   |   Update On 2020-01-09 07:57 GMT
இந்த ஆண்டில் நிகழவிருக்கும் முதல் சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டுள்ளது.
சென்னை:

சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே புவி கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு சற்றே மங்கிய நிலையில் காணப்படும். 

கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் மீது விழும். மேலும் கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் நிலவின் ஒளி மங்கும், பிறநாட்களில் காட்சியளிப்பது போல இருக்காது.

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10-ம் தேதி நிகழ இருக்கிறது. இந்த சந்திர கிரகணத்திற்கு நாசா ‘ஓநாய் சந்திர கிரகணம்’ (Wolf Moon Eclipse) என்ற பெயரைச் சூட்டியுள்ளது. இந்த கிரகண நிகழ்வை இந்தியா மட்டுமல்லாது, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது. 



இந்த ஆண்டு நிகழவிருக்கும் 4 சந்திர கிரகணங்களில் இது முதலாவது ஆகும். மேக மூட்டம் இல்லை என்றால் நாம் வெறும் கண்ணால் இந்த கிரகண நிகழ்வை பார்த்து ரசிக்க முடியும். 10-ம் தேதி இரவு 10.37 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2.42 மணி வரை கிரகணம் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திர கிரகணத்தை காண புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என பாண்டிச்சேரி அறிவியல் மன்றம் மற்றும் புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்ப கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News