செய்திகள்
புதுப்பட்டு மூங்கில் குளம் தூர்வாரி மழைநீர் சேமிக்கப்பட்டுள்ளது
குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் புதுப்பட்டு மூங்கில் குளம் தூர்வாரி மழைநீர் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிமராமத்துத் திட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
காவேரிப்பாக்கம்:
குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2020-2021ம் ஆண்டுக்கான தமிழக முதல்-அமைச்சர் திட்டமான குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் மூலம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள ஊரணி, குளங்கள், ஏரிகள் கரைகளை பலப்படுத்த கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை மூலம் மொத்தம் 369 ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மங்கலம், கீழ்வீராணம், புதுப்பட்டு உள்பட 14 ஊராட்சிகளுக்கு குளங்கள் தூர்வார அனுமதி வழங்கப்பட்டது. அதில் புதுப்பட்டு ஊராட்சியில் உள்ள மூங்கில் குளம் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரப்பட்டது.
சமீபத்தில் பெய்த மழையால் மூங்கில் குளம் முழுவதும் மழைநீர் சேமிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு இன்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் குடிமராமத்துத் திட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.