தொடர் விடுமுறை: கல்லார் பழபண்ணைக்கு 2 நாட்களில் 2,680 பேர் வருகை
- அலங்கார செடி வகைகளான குரோட்டன்ஸ், செம்பருத்தி, இக்ஸோரா, பாக்கு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
- பெரியவர்களுக்கு ரூ.20-ம், குழந்தைகளுக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஊட்டி:
மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இயற்கை எழில் நிறைந்த சூழலில் அரசுத் தோட்டக்கலை பழப்பண்ணை அமைந்துள்ளது.
இங்கு பாக்கு, சில்வர் ஓக், காபி நாற்றுகள், மலேசியாவை தாயகமாக கொண்ட மங்குஸ்தான், துரியன் பழம், ரம்பூட்டான், இலவங்கம், எலுமிச்சை, நெல்லிக்காய், வெல்வட் ஆப்பிள், பலா, மலேசியன் ஆப்பிள் என பல்வேறு வகையான பழ மரங்களும், கிராம்பு, மிளகு உள்ளிட்ட வாசனை திரவிய பயிர்களும் உள்ளன.
இதுதவிர அலங்கார செடி வகைகளான குரோட்டன்ஸ், செம்பருத்தி, இக்ஸோரா, பாக்கு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வ ருகிறது.
இதனை கண்டுகளிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை தினங்களில் கூட்டம் அலைமோதும்.
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய 2 தினங்களில் மட்டும் கல்லாறு பழப்பண்ணைக்கு 2.680 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
அவர்கள் பழப்பண்ணையை கண்டு ரசித்து சென்றனர். இங்கு பெரியவர்களுக்கு ரூ.20-ம், குழந்தைகளுக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 2 தினங்களில் மட்டும் ரூ.50,430 வருவாய் கிடைத்துள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தீபாவளியன்று பெரியவர்கள் 760 பேர், குழந்தைகள் 88 பேர் வந்தனர். மறுநாள் திங்கட்கிழமை பெரியவர்கள் 1603 பேரும், 229 குழந்தைகளும் வந்தனர். 2 தினங்களில் மட்டும் இங்கு 2,680 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இதன் மூலம் பழப்பண்ணைக்கு ரூ.50,430 வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.