வருகிற செவ்வாய்க்கிழமை முதல் சென்னையில் இருந்து தினமும் பெங்களூரூ புறப்படும் 2-வது வந்தே பாரத் ரெயில்
- வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை-பெங்களூர்- மைசூர் வழித்தடத்தில் ரெயில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் 2-வது வந்தே பாரத் ரெயிலை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து காலையில் புறப்பட்டு மதியம் மைசூரை அடையும். ஆனால், இப்போது அறிமுகப்ப டுத்தப்படும் வந்தே பாரத் ரெயில் காலையில் மைசூரில் இருந்து கிளம்பி, மதியம் சென்னை வந்தடையும். இந்த வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் இந்த வந்தே பாரத் ரெயில் மாண்டியா, எஸ்எம்விடி பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மைசூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில் காலை 7.45 மணிக்கு பெங்களூர் வரும். மதியம் 12.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், இரவு 9.25 மணிக்கு பெங்களூர் சென்றடையும். இரவு 11.20 மணிக்கு மைசூர் செல்லும்.
சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரெயில் தொடங்கப் பட்ட பிறகு சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வந்தே பாரத் ரெயில் சேவை கிடைக்கும். இதன் மூலம் பயணிகள் சென்னையில் இருந்து 4.25 மணி நேரத்தில் பெங்களூர் செல்லலாம்.