வங்கியில் பணம் செலுத்த வந்த பெண்ணிடம் ரூ.36 ஆயிரம் அபேஸ்
- வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஹேமலதா காத்து நின்றார்.
- சிறிது நேரம் கழித்து வந்த மர்ம நபர் பணம் செலுத்திவிட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (22). இவர் ரூ.36 ஆயிரத்துடன் தனது வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்காக கே.கே நகர் ஆர்.கே சண்முகம் சாலையில் உள்ள வங்கிக்கு சென்றார். வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஹேமலதா காத்து நின்றார் அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஹேமலதாவிடம் நைசாக பேச்சு கொடுத்தார் மேலும் வங்கி ஊழியர்கள் அனைவரையும் தனக்கு நன்றாக தெரியும் ஆகவே கவுண்ட்டரில் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று பணம் செலுத்தி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார் இதை உண்மை என்று நம்பிய ஹேமலதா ரூ36ஆயிரம் ரொக்கத்தை அவரிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து வந்த மர்ம நபர் பணம் செலுத்திவிட்டதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
பின்னர் அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்குள் சென்ற ஹேமலதா தனது வங்கி கணக்கில் பணம் ஏதும் செலுத்தப்படவில்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார் மேலும் பணம் செலுத்திவிட்டதாக கூறிய மர்ம நபர் நூதனமான முறையில் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது.