தமிழ்நாடு

வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை- சேவை கடுமையாக பாதிக்கும் அபாயம்

Published On 2024-03-25 08:07 GMT   |   Update On 2024-03-25 08:07 GMT
  • நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.
  • சிறு தொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் போன்ற பணிகள் பாதிக்கும்.

சென்னை:

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியை முன்னிட்டு 29-ந்தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். மறுநாள் (சனிக் கிழமை) மாதத்தின் 4-வது வாரம் என்பதால் வங்கிக்கு விடுமுறையாகும்.

31-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை நடப்பு நிதியாண்டு கணக்குகள் முடிக்கப்படுகிறது. இந்த வருடம் விடுமுறை நாளில் ஆண்டு கணக்கு முடிக்கக்கூடிய சூழல் வந்துள்ளதால் அன்று பெரும்பாலான வங்கிகள் மூடப்படும். அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிகள் மட்டும் செயல்படும்.

ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக பொதுமக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் திறந்து இருக்கும். வங்கிகள் 4 நாட்கள் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது.

ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் நாள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் நாள் ஆகியவை அடுத்தடுத்து வருவதால் வங்கிகள் செயல்படாது. நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.

இதுகுறித்து அகில இந்திய வங்கிஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

புனித வெள்ளி விடுமுறை நாட்களோடு சனி, ஞாயிறு விடுமுறையும் சேர்ந்து வருவதால் தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்கிற்காக பொது மக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் செயல்படும்.

எனவே வரும் நாட்கள் தொடர் விடுமுறையால் வங்கி சேவை பாதிக்ககூடும். பணம்மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கும். சிறு தொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் போன்ற பணிகள் பாதிக்கும். ஏ.டி.எம். மையங்கள் முழு கொள்ளளவோடு செயல்படும். பணம் தீர்ந்தாலும் உடனே வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News