வருகிற 4-ந்தேதி 8 கி.மீட்டர் தூரத்துக்கு நடை பயிற்சி இயக்கம்- கலெக்டர் தகவல்
- முதலமைச்சர், நடப்போம் நலம் பெறுவோம் என்ற நடைபயிற்சி இயக்கத்தினை தொடங்கி வைக்க உள்ளார்.
- நடைப்பயிற்சி துவங்கும் இடமான மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருக்கிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு பிரதிமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலம் பெறுவதற்கான நடைப்பயிற்சி இயக்கம் நடைபெற உள்ளது. வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) முதலமைச்சர், நடப்போம் நலம் பெறுவோம் என்ற நடைபயிற்சி இயக்கத்தினை தொடங்கி வைக்க உள்ளார். காஞ்சிபுரம் பகுதியில் இந்த நடைபயிற்சி நடைபெறும் வழித்தடங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து திருப்பருத்திக்குன்றம் , கீழ்கதிர்பூர் சாலை மார்க்கமாக கீழ்கதிர்பூர் கூட்டுசாலை வரை சென்று மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நலவாழ்வு நடைபயிற்சி இலக்காக 8 கிலோமீட்டர் அளவிற்கு நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடைபாதை வழித்தடங்களில் தாகம் தணிக்க குடிநீர் வசதிகள், ஓய்வெடுக்க அமரும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி துவங்கும் இடமான மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொற்றா நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருக்கிறது. இதில் அனைவரும் பங்கேற்று நடப்போம், நலம் பெறுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.