அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவர் பணிக்கு 4,800 பேர் ஆன்லைனில் விண்ணப்பம்
- விண்ணப்பிக்கும் டிரைவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் என்று தெரிகிறது.
- விண்ணப்பங்களை பரிசீலனை செய்து எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அனுப்பப்படும்.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 டிரைவர் பணி இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
நீண்ட நாட்களாக டிரைவர் பற்றாக்குறையால் கடுமையான நெருக்கடியில் இருந்த போக்குவரத்து கழகம் புதிதாக நடத்துனருடன் டிரைவர் பணிக்கான ஆட்களை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்தும் பஸ் டிரைவர் பணிக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று காலை வரையில் 4,800 பேர் விண்ணப்பித்து இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.
அடுத்த மாதம் 18-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால் விண்ணப்பிக்கும் டிரைவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் என்று தெரிகிறது.
இதுவரையில் அரசு போக்குவரத்து கழக டிரைவர்-கண்டக்டர் பணி நியமனத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மட்டுமே நடைப்பெற்றது. தற்போது முதன் முறையாக எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பங்களை பரிசீலனை செய்து எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அனுப்பப்படும். அக்டோபர் மாதத்தில் எழுத்து தேர்வு நடைபெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
தனியார் ஏஜென்சி மூலம் இந்த பணியினை மேற்கொள்ள போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.