தமிழ்நாடு

ஆசனூர் அருகே 3 -வது நாளாக மின்தடையால் இருளில் மூழ்கிய 50 மலை கிராமங்கள் குடிநீர் இல்லாமல் மக்கள் கடும் அவதி

Published On 2023-07-23 06:29 GMT   |   Update On 2023-07-23 06:29 GMT
  • கடந்த 1 வருடமாக நீடிப்பதாக மலை கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
  • மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மழை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஆசனூர் மலைகிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக ஆசனூர், கேர்மாளம், திங்களூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 50 -க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு மின்வினியோகம் வழங்கபட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி யளவில் வீசிய சூறாவளி காற்றால் வனப்பகுதி வழியாக வரும் மின்கம்பி அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதிபட்டு வந்தனர். மலை கிராமமான ஆசனூர், அரேபாளையம் ,குளியாட, தேவர்நத்தம், கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், மாவள்ளம் என 50 மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.

மின்தடையால் விடிய விடிய பொது மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். தொடர்ந்து இன்று 3- வது நாளாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குடிநீர் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் மலைகிராம மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து வாரத்தில் 2 அல்லது 3 முறை இதே போல் மின் கம்பி தூண்டிக்கபட்டு விடுகிறது.மின்பழுதை சரி செய்ய போதிய மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால் 1 நாள் அல்லது 2 நாட்கள் கழித்துதான் மின்பழுது சரி செய்யபடுகிறது. இதே நிலைமை கடந்த 1 வருடமாக நீடிப்பதாக மலை கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் குடிநீர் இல்லாமலும் பள்ளி மாணவ- மாணவிகள் படிக்க முடியாமலும் சிரமம் அடைந்து வருகின்றனர். சத்தியமங்கலம் இருந்து ஆசனூர் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமை யானதாக இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறுகின்றனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மழை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News