காசிமேடு மீனவர்களின் 600 படகுகளில் இஸ்ரோ தொழில் நுட்பத்துடன் தொலைத்தொடர்பு கருவி
- இயற்யை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும்.
- தமிழ்நாட்டில் உள்ள படகுகளில் சுமார் 5 ஆயிரம் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.18 கோடி நிதி உதவி வழங்கி உள்ளது.
ராயபுரம்:
ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும்போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல்தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிக கனமழை மற்றும் புயலின் போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனை தடுக்கும் வகையில் இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் அதிநவீன தொலைத்தொடர்பு டிரான்ஸ்மீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை மீனவர்களின் படகுகளில் பொருத்தும்போது அவர்கள் கடலில் எந்த பகுதியில் உள்ளனர் என்பதை கண்டறிந்து இயற்யை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள படகுகளில் சுமார் 5 ஆயிரம் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.18 கோடி நிதி உதவி வழங்கி உள்ளது. இந்த டிரான்ஸ்பாண்டர்கள் ஜிசாட்-6 செயற்கைகோள் மூலம் தகவல் தொடர்பு அளிக்கும்.
இதனைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 600 மீனவர்களின் படகுகளில் இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் கூடிய டிரான்ஸ்பா ண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஜிசாட்-6 செயற்கைகோள் வழியாக இயங்கும்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, இஸ்ரோ இந்த தொழில்நுட்பத்தை வழங்கி உள்ளது. முதற்கட்டமாக 1,400 படகுகளில் இவை இணைக்கப்படும். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் குளச்சல் ஆகிய இடங்களில் இதுவரை 900 டிரான்ஸ்பாண்டர்கள் படகுகளில் பொருத்தப்பட்டுள்ளன.
நாட்டிலேயே ஜிசாட்-6 மூலம் தகவல் தொடர்பு சாதனங்களைப் பெற்ற முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட வேண்டும் என்றால் அதனை இந்த சாதனம் மூலம் செய்யலாம். மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் 28 மணி நேரம் இயங்கக்கூடிய செலவு குறைந்ததாகும் என்றார்.