ஆண்கள் மட்டும் பங்கேற்ற விழாவில் 62 ஆடுகள் பலியிட்டு 'கமகம' கறிவிருந்து
- திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகள் நேர்த்திக் கடனாக விடப்பட்டு, கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.
- சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் விருந்தை ருசி பார்த்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திரு மங்கலம் கரடிக்கல் அருகே அனுப்பப்பட்டியில் உள்ளது கரும்பாறை முத்தையா கோவில். இந்த கிராமத்தின் காவல் தெய்வமாக கரும் பாறை முத்தையாவை வழிபட்டு வருகின்றனர். இங்கு மார்கழி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ விருந்து திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.
இந்த விழாவுக்கு, பிறந்த பச்சிளம் பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பங்கேற்க அனுமதி கிடையாது. ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகள் நேர்த்திக் கடனாக விடப்பட்டு, கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன.
கரடிக்கல், குன்னம்பட்டி, அனுப்பப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின்னர், கிடாய்களை இந்த கோவி லில் விட்டுச் செல்வார்கள். அப்படி விடப்பட்ட கிடாய்கள் இந்த கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் வயல்வெளிகளில் மேயும். கோவில் கிடாய்களை யாரும் விரட்டமாட்டார்கள். முத்தையா சாமியே தங்களது வயலில் இரை தேடுகிறார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆண்டு திருவிழாவில் நேர்த்திக்கடனாக விடப்பட்டு 62 ஆடுகள் கோவிலில் பலியிடப்பட்டன. பின்னர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட 85 மூடை அரிசியை கொண்டு 2 ஆயிரம் கிலோ சாதம் சமைத்து பிரமாண்ட அசைவ விருந்து தயாரானது. கம கம கறி வாசனையுடன் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது.
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் விருந்தை ருசி பார்த்தனர்.
கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவி லிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த அசைவ விருந்தை சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காய்ந்து, அந்தப் பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோவிலில் சாமி கும்பிட வருவது வழக்கமாக .
மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் திருவிழா விற்காக சிறிய கிடாய்கள் கோவில் வளாகத்தில் நேர்த்திக்கடனாகவும் விடப்பட்டன.