பருவமழையின் போது 72 இடங்கள் பாதிக்கப்படும்- மீட்பு பணிக்கு 21 மண்டல குழுக்கள் ஏற்பாடு
- அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
- மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமை தாங்கினார்.
கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில், 3 மிக அதிக பாதிக்கப்படும் பகுதிகளி்ல், 21 அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 பாதிக்கப்படும் பகுதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 11 துறையைச் சார்ந்த அலுவலர்களை கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை ஆட்சியர் நிலையிலான குழுத்தலைவர்கள் மற்றும் துணை குழுத்தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் விவரங்களை முன்கூட்டியே பட்டியலிட்டு. மழை பொழிவின் போது அவர்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அவசரத் தேவைக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகளும், கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மொபைல் நிறுவனங்களில் உயர்கோபுரங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் ஆகியவை செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.
இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொ) கணேஷ் கலந்து கொண்டனர்.