காசிமேட்டில் 750 விசைப்படகுகளில் இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் கருவி- தமிழகத்தில் 5 ஆயிரம் படகுகளில் இணைக்கப்படுகிறது
- அதிக கனமழை மற்றும் புயலின்போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.
- இயற்கை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும்.
ராயபுரம்:
ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும் போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல்தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிக கனமழை மற்றும் புயலின்போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனை தடுக்கும் வகையில் இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் அதி நவீன தொலைத்தொடர்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது காசிமேடு மீனவர்களின் 750 படகுகளில் பொருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் கடலில் எந்த பகுதியில் உள்ளனர் என்பதை கண்டறிந்து இயற்கை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும். இது ஜிசாட்-6 செயற்கை கோள் வழியாக இயங்கும்.
இந்த தொழில்நுட்ப கருவியில் எஸ்.ஓ.எஸ். என்ற அவசரகால பட்டன் உள்ளது. இதை மீனவர்கள் அவசர காலத்தில் அழுத்தினால் அதில் இருந்து தகவல் மற்றும் படகு இருக்கக்கூடிய இடத்தை தகவலாக மீன்வளத்துறை, படகின் உரிமையாளர், மற்றும் கடலோர காவல் படையினருக்கும் தகவலாக சென்று அடையும். இதே போல் கடலில் மற்றொரு படகு ஆபத்தில் இருக்கும் நேரத்தில் அதையும் மற்றொரு படகில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதன் மூலம் கண்டறிக்கூடிய தொழில்நுட்ப கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆழ் கடலில் உள்ள மீனவர்களின் படகுகளை சுலபமாக கண்டறிந்து மீட்க முடியும். மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் 28 மணி நேரம் இந்த கருவி இயங்கும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த கருவியை தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் விசைப் படகுகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.18 கோடி நிதி உதவி வழங்கபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.