டேங்கருடன் கூடிய டிராக்டரை ஓட்டும் 12 வயது சிறுவன்- அச்சத்தில் உள்ளூர் மக்கள்
- வாகனங்கள் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும், பெருத்த சேதமும் ஏற்படுகிறது.
- 12 வயது சிறுவன் மெயின் ரோட்டிலும், ஊருக்குள்ளும் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வருகிறார்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஓட்டுனர் உரிமம் இன்றி பள்ளி மாணவர்கள், மோட்டார் சைக்கிள்கள், 4 சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வாகனங்கள் மூலம் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும், பெருத்த சேதமும் ஏற்படுகிறது.
போலீசார் கண்காணித்து ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணம் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதித்தாலும் சிறு வயதிலேயே லாரிகளை ஓட்டிச் செல்லும் குழந்தைகளை பெற்றோர்களே ஊக்கப்படுத்தி வருகின்றனர். 18 வயது பூர்த்தியடைந்தால்தான் ஓட்டுனர் உரிமமே வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கும் குறைவான வயதுடைய சிறுவர்களும் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.
சில நேரங்களில் சாகச பயணம் மேற்கொண்டு அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர். இதே போல ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தில் தண்ணீர் டேங்கருடன் இணைந்த டிராக்டரை 12 வயது சிறுவன் மெயின் ரோட்டிலும், ஊருக்குள்ளும் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வருகிறார்.
இதனை அவரது குடும்பத்தினரே ஊக்கப்படுத்தி வருகின்றனர். சிறுவன் டிராக்டர் ஓட்டி வரும் போது தெருவில் நடந்து செல்லும் மக்கள் அச்சத்தில் தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இப்பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.