இந்திய அணி வெற்றி பெற வாழ்த்தி திருச்சியில் ரசிகர்கள் காட்சிக்கு வைத்த 15 அடி உயர உலக கோப்பை மாதிரி
- ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேண்டுதல்கள், வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
- உலககோப்பை மாதிரியை 11 பேர் கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்து 11மணி நேரம் உழைத்து தயாரித்து உள்ளனர்.
திருச்சி:
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற கிரிக்கெட் ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேண்டுதல்கள், வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
திருச்சியில் ரசிகர்கள் சற்று வித்தியாசமாக 15 அடி பிரம்மாண்டமான கிரிக்கெட் உலகக்கோப்பை மாதிரி செய்து காட்சிக்கு வைத்துள்ளனர். அத்துடன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து 'ஆல் தி பெஸ்ட் இந்தியா' என்ற வாசகத்துடன் கூடிய பேனரும் வைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி மேலப்புலிவார்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதை நிறுவி உள்ளனர். இந்த உலககோப்பை மாதிரியை 11 பேர் கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்து 11மணி நேரம் உழைத்து தயாரித்து உள்ளனர்.
லட்சுமி நரசிம்மன் தலைமையிலான இந்தக் குழுவினர் பிரம்மாண்டமான உலகக் கோப்பை வைத்து வாழ்த்து தெரிவிப்பது இத்துடன் 3 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்பை திருச்சி, மேலப்புலிவார்டு ரோடு இப்ராஹிம் பூங்கா எதிர்வரிசையில் ஒரு வணிக வளாகத்தின் முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பலரும் இதை ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
ஏற்கனவே திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் இந்தியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கோப்பையையொட்டி 60 ஆண்டு காலம் சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த பழங்கால நாணயங்களை கொண்டு உலகக்கோப்பையை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் கிரிக்கெட் உலக கோப்பையை வாழ்த்தும் வகையில் 1975-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை உள்ள இந்திய நாணயங்களை கொண்டு திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக செயலாளர் பத்ரி நாராயணனால் உருவாக்கப்பட்ட உலக கோப்பை மத்திய நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயங்களில் இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது இந்த நாணயங்களால் வடிவமைக்கப்பட்ட உலக கோப்பை அருகே கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.