பிரியாணி போட்டிக்கு வந்து சிக்கிய பரிதாபம்- ஓட்டல் மேலாளர் மீது வழக்கு
- போக்குவரத்து போலீசார் உடனடியாக அபராதம் விதித்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை:
கோவை ரெயில் நிலையம் அருகே ரெயில்பெட்டியை கொண்டு புதிய ஓட்டல் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஓட்டலில் நேற்றுமுன்தினம் பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.
அரை மணி நேரத்தில் 6 பிளேட் பிரியாணியை சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. மேலும் 4 பிளேட் சாப்பிட்டால் ரூ.50 ஆயிரம், 3 பிளேட் சாப்பிட்டால் ரூ.25 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பு காரணமாக போட்டியில் பங்கேற்க ஏராளமானோர் ஓட்டல் முன்பு திரண்டனர். அவர்கள் வந்த வாகனமும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் வந்து செல்லும் முக்கியமான சாலை என்பதால் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி நகர் முழுவதும் எதிரொலித்தது.
இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி இருந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்து போலீசார் உடனடியாக அபராதம் விதித்தனர்.
இந்தநிலையில் பிரியாணி போட்டி நடத்திய ஓட்டல் மேலாளர் கணேஷ் என்பவர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அனுமதியின்றி போட்டியை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.