வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 10ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.
- மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. குறிப்பாக, மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைகிறது.
கடந்த வாரம் மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்து ஆந்திரா அருகே கரையை கடந்தது. இதனால் ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
அங்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை வலுவடைகிறது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 10ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,
சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோர பகுதிகள் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மணிக்கு 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.