புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது- தமிழகத்தில் 29-ந் தேதி கனமழைக்கு வாய்ப்பு
- தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
- காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்ற பின்னரே அது எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வரும் நிலையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து கொண்டே இருக்கிறது. சென்னையிலும் கடந்த சில நாட்களாகவே இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அந்த மான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வருகிற 29-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 29-ந் தேதி அன்று தாழ்வு மண்டலமாக மாறுவதால அன்று தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நாளை உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, அது தாழ்வு மண்டலமாக மாறிய பிறகே தெரியவரும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்ற பின்னரே அது எந்த திசையை நோக்கி நகரும் என்பது தெரிய வரும். தமிழக பகுதியை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நகர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.