கொடைக்கானலில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் நடிகர்கள்- குறைதீர் கூட்டத்தில் புகார்
- பொதுமக்கள் எதிர்ப்பையடுத்து அந்த அறிவிப்பு பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு ஜே.சி.பி எந்திரம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் மட்டும் தடையின்றி பயன்படுத்துவது எப்படி?
கொடைக்கானல்:
கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் ஆர்.டி.ஓ ராஜா தலைமையில் நடைபெற்றது. உதவி வனபாதுகாவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார். நகராட்சி மேலாளர் மீனா, தோட்டக்கலை உதவி இயக்குனர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர், ரேஞ்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்ததாவது, வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு வனத்துறையிடம் மனுக்கள் அளித்தும் அவற்றின் ஆவணங்கள் மாயமாகி விட்டதாக வனத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
மலைப்பகுதியில் விவசாயம் செய்யப்படும் காய்கறி பயிர்களை பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. கொடைக்கானல் பகுதியில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து நடிகர்கள் வீடு கட்டி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஜே.சி.பி எந்திரம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் மட்டும் தடையின்றி பயன்படுத்துவது எப்படி? அரசு நிலத்தை மறித்து சாலை அமைத்துள்ளனர். அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
பொதுமக்கள் எதிர்ப்பையடுத்து அந்த அறிவிப்பு பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
பேத்துப்பாறையை சேர்ந்த ஊர்தலைவர் மகேந்திரன்தெரிவிக்கையில், நடிகர் பிரகாஷ்ராஜ் அரசு அனுமதியை மீறி ஜே.சி.பி வாகனங்களை கொண்டு சாலை அமைத்துள்ளார். நடிகர் பாபிசிம்ஹா அனுமதியின்றி கட்டிடம் கட்டி வருகிறார். விதிகளை மீறி மின்இணைப்பு பெற்றுள்ளார். 24 மணிநேரமும் ஜே.சி.பி வாகனங்களை இயக்கி வேலைசெய்துவரும் நடிகர்கள் மீதும், இதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.