தமிழ்நாடு

நெல்லை மாநகராட்சியில் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஆதரவு

Published On 2023-12-07 08:22 GMT   |   Update On 2023-12-07 08:22 GMT
  • தற்போது 80 சதவீதம் கவுன்சிலர்கள் அதாவது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
  • ஒரு மாதத்திற்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

நெல்லை:

நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் தச்சை கணேசராஜா இன்று மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமாறு மனு அளித்துள்ளனர்.

தற்போது 80 சதவீதம் கவுன்சிலர்கள் அதாவது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு கொண்டு வரும்போது மாநகராட்சி கமிஷனர் அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து கவுன்சிலர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

தற்போது உள்ள கமிஷனர் மிகவும் நேர்மையான நபராக இருப்பதால் கண்டிப்பாக இதை செய்வார் என்று நம்புகிறோம்.

தற்போது கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மக்கள் நலனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க கவுன்சிலர்கள் நிச்சயமாக ஆதரவு அளிப்பார்கள்.

மாநகராட்சி கமிஷனர் உடனடியாக இந்த மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியை முடக்கி வைத்து உடனடி தீர்வு காண வேண்டும்.

சுமார் 6 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த மாநகராட்சியில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தற்போதுள்ள தி.மு.க அரசின் மாநகராட்சியை கலைக்க வேண்டும். தற்போது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான மனுவில் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் கையெழுத்தும் இருக்கலாம்.

சந்திப்பு பஸ் நிலையம் எப்போது திறக்கும் என்று தெரியவில்லை. பேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட சரக்கு முனையத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அது பயன்பாட்டுக்கு வரவில்லை. ரூ.2.85 கோடி மதிப்பில் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் சீரமைக்கப்பட்டது என்று கூறினர். ஆனால் வெறுமனே பெயிண்டிங் மட்டும் அடித்து முடித்து விட்டனர். தற்போது அதில் தூண் பகுதி இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம், பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன்,தச்சை மாதவன், மாவட்ட இளைஞர் பாசறை முத்துப்பாண்டி, சம்சு சுல்தான் உள்பட பலர் இருந்தனர். 

Tags:    

Similar News