சுகாதார சீர்கேட்டை சரி செய்யாத நகராட்சியை கண்டித்து தாம்பரத்தில் அ.தி.மு.க. 5-ந் தேதி ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி
- டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- சேலையூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் மாசடைந்து வருகின்றன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சியில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 5-க்கு உட்பட்ட இடங்களில், அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசும், தாம்பரம் மாநகராட்சியும் தவறியதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதால், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சேலையூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் மாசடைந்து வருகின்றன.
இங்குள்ள அம்மா உணவகத்தில், 1500-க்கும் மேற்பட்ட மக்கள் உணவருந்தி பயன்பெற்று வந்த நிலையில் தற்போது, தரமற்ற உணவு வகைகளை தயார் செய்வதால் மிகவும் குறைவான மக்களே உணவருந்தி வருகின்றனர்.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-5-ல் நிலவி வரும் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்சனை, தெரு விளக்குகள் எரியாமை, பாதாள சாக்கடைத் திட்டம் சரிவர முடிக்காதது, குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்யாதது, ஏரிகளில் கழிவு நீர் கலப்பது முதலானவற்றை சரிசெய்யத் தவறிய தி.மு.க. அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை யும் கண்டித்தும், அம்மா உணவகங்களில் வழங்கப் படும் உணவுகளின் தரத்தைக் குறைத்து, இத்திட்டத்திற்கு மூடுவிழா காணத் துடிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், தாம்பரம் கிழக்கு, மாடம்பாக்கம் ஆகிய பகுதிக் கழகங்கள் ஒன்றிணைந்து, வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், தாம்பரம் கிழக்கு, வால்மீகி தெருஏரிக்கரை தெரு சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகி களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.
தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொது மக்களும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.