தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தலை கண்டித்து சென்னையில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- 9 மாவட்ட செயலாளர்கள் ஒன்று சேர்ந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
- அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் நாளை (திங்கட் கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.
இதன்படி சென்னையில் 9 மாவட்ட செயலாளர்கள் ஒன்று சேர்ந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் காலை 9.30 மணிக்கு நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், பால கங்கா, வி.என்.ரவி, ஆதி ராஜாராம், வெங்கடேஷ் பாபு, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், அசோக், கே.பி.கந்தன் உள்ளிட்ட 9 மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள்.
இதில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.
இதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தங்களது மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதையொட்டி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.