620 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை இன்றிரவு குறைப்பு?
- இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்தது.
- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த 2021-ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்ததால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 112 ரூபாய் வரை எட்டியது. அதுபோல டீசல் விலையும் 103 ரூபாய் என்ற அளவுக்கு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9-ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 காசும் குறைக்க முடிந்தது.
கடந்த 620 நாட்களாக இந்த விலை குறைப்பு அமலில் உள்ளது. கடந்த 620 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை எந்தவிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்தது.
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது பற்றி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வந்தன.
பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.10-ம், டீசல் விலையில் ரூ.7-ம் குறைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. நாளை (பிப்ரவரி 1) முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரலாம் என்று கூறப்பட்டது. எனவே இது தொடர்பான அறிவிப்பு இன்று இரவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.