பாராளுமன்ற தேர்தல் களத்தில் மறைந்த தலைவர்களை கண்முன்னே கொண்டு வரும் ஏ.ஐ. வீடியோக்கள்
- டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.
- ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏ.ஐ. வீடியோக்களும் முக்கிய பங்காற்ற தொடங்கி உள்ளன.
இந்த தேர்தல் களத்தில் இதனை ஆளும் கட்சியான தி.மு.க. முதல் முறையாக கையில் எடுத்து செயல்படுத்தி உள்ளது. சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை வாழ்த்துவது போன்ற ஏ.ஐ. வீடியோ வெளியிடப்பட்டது.
தி.மு.க. மாநாட்டு பந்தலிலும் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் கருணாநிதியே மாநாட்டுக்கு நேரில் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இதே போன்று முன்னாள் மத்திய மந்திரியும் தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.
இப்படி தி.மு.க. சார்பில் இரண்டு வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி அது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதேபோன்று மறைந்த தங்கள் தலைவர்கள் ஏ.ஐ. வீடியோ மூலம் பேசுவதற்கான ஏற்பாடுகளையும் மற்ற கட்சியினரும் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடியோவை தயாரித்து வெளியிட அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதே போன்று மற்ற அரசியல் கட்சியினரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோக்களை தயாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த வீடியோக்கள் மூலம் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
குறிப்பாக இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கும் கட்சியினர் மறைந்த தங்களது தலைவர்களை பயன்படுத்தி மாற்று அணியினரை விமர்சிக்க முடியும் என்ப தால் அது அரசியல் களத்தில் மோதல் போக்கை உரு வாக்க வழிவகுக்கும் என்கிறார்கள்.
உதாரணத்துக்கு தமிழகத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பது போன்று ஏ.ஐ. வீடியோக்களை வெளியிட்டால் அது இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர்.
தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. இந்த அணிகளை சேர்ந்தவர்களும் மறைந்த தங்களது தலை வர்களை ஏ.ஐ. வீடியோக்கள் மூலமாக உருவாக்கி விமர்ச னம் செய்யவும் வழி வகுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில் அதனை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கணிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.