தமிழ்நாடு

உடல்நலம் குன்றிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: குட்டி யானையை கண்காணிக்கும் வனத்துறையினர்

Published On 2024-04-12 06:03 GMT   |   Update On 2024-04-12 06:03 GMT
  • அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
  • தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி வறண்டு போய் உள்ளது. இதனால் காட்டுயானைகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி அங்கும் இங்கும் அலைகின்றன.

இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த யானையை சுற்றி ஒரு குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பிளறிக் கொண்டிருந்தது.

இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவ குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியம ங்கலம் புலிகள் காப்பாக துணை இயக்குனர் குலால் யோகேஷ் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெண் யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

முதலில் குட்டி யானையை தாய் யானையிடம் இருந்து பிரித்து வனத்துறையினர் தனியாக அழைத்து சென்றனர். பின்னர் தாய் யானைக்கு முதலில் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அந்த யானையின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது. இதற்கு இடையே குட்டி யானையின் சத்தத்தை கேட்டு காட்டில் உள்ள 6 காட்டுயானை கூட்டம் சம்பவ இடத்திற்கு வந்தது.

காட்டு யானைகள் கூட்டத்தை கண்டதும் வனத்துறையினர் மருத்துவக் குழுவினர் அங்கிருந்து சற்று விலகி இருந்தனர். பின்னர் அந்த யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சென்றது. அதன் பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் யானையை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை இரவில் பரிதாபமாக இறந்தது.

இதனையடுத்து அந்த யானையின் உடல் அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக போடப்பட்டுள்ளது. இதற்கிடையே காட்டு யானை கூட்டத்துடன் சென்ற குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழுவினர் அந்த குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

கடந்த மாதம் பண்ணாரி கோவில் அருகே பெண் யானை உயிரிழந்தது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூரில் ஒரு பெண் யானை உயிரிழந்தது. தற்போதும் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது.

தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News