அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு: பஞ்சலிங்க அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை
- பலத்த மழையின் காரணமாக அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்து 7ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
- திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.
அதை ஆதாரமாக கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆற்றை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அத்துடன் பலத்த மழையின் காரணமாக அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்து 7ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இன்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 72.34 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. ஒரே நாளில் 8 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திருப்பூர் மாநகரின் ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி பல்லடத்தில் 4 மில்லி மீட்டர் மழை , தாராபுரம் தாலுக்கா பகுதியில் 4 மி.மீ., , உப்பாறு அணை பகுதியில் 10 மி.மீ., உடுமலைப்பேட்டை பகுதியில் 27 மி.மீ., அமராவதி அணை பகுதியில் 22 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருமூர்த்தி அணை பகுதியில் 51 மில்லி மீட்டரும் , மடத்துக்குளம் தாலுகா பகுதியில் 10 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 178 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி இருப்பதாகவும், சராசரியாக 8.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் திருப்பூரில் குளுகுளு வானிலை நிலவி வருகிறது. உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரி த்துள்ளதால் இன்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.