அமோனியா கசிவு வழக்கு: பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு
- கடந்த வருடம் டிச.26-ந்தேதி இரவு திடீரென இந்த குழாயில் சேதம் ஏற்பட்டு, குழாயில் தேங்கியிருந்த வாயு வெளியேறத் தொடங்கியது.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை முறையாக உர தொழிற்சாலை நிறுவனம் கடைபிடிக்க வேண்டும்.
சென்னை:
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த உரத் தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. அந்த அமோனியா திரவ வாயு தொழிற்சாலையில் உள்ள பெரிய கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் டிச.26-ந்தேதி இரவு திடீரென இந்த குழாயில் சேதம் ஏற்பட்டு, குழாயில் தேங்கியிருந்த வாயு வெளியேறத் தொடங்கியது. இதனால் வாயு காற்றில் கலந்து பரவத் தொடங்கியது. இதனால் மக்களுக்கு வாந்தி மயக்கம், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் அமோனியா வாயு கசிந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்ட வழக்கில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில்,
* தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை முறையாக உர தொழிற்சாலை நிறுவனம் கடைபிடிக்க வேண்டும்.
* சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து என்.ஓ.சி. பெற்றபின், ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம்.
* எண்ணூர் கோரமண்டல் ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசின் அனுமதி அவசியம்.
* மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிடும் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.