வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி ? தமிழிசையை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை
- சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை- அண்ணாமலை விவாதம் என தகவல்.
நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது. ஆனால், தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை.
தோல்வி குறித்து அப்போது பேசிய அண்ணாமலை மற்றும் தமிழிசை கூட்டணி குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தனர். இதனால், முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிப்பதாக கூறப்பட்டு வந்தது.
இதைதொடர்ந்து, விழா மேடைக்கு வந்த முன்னாள் தெலுங்கானா கவர்னரும், தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டிக்கும் வகையில் பேசினார். தமிழிசைக்கும் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தை போர்ரை தவிர்க்கவே கண்டித்ததாகவும் தகவல் பரவியது.
இந்நிலையில், இன்று தமிழிசையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சந்திப்பின்போது, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை- அண்ணாமலை விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, தமிழிசை- அண்ணாமலை இடையே கருத்து வேறுபாடு என தகவல்கள் பரவி வந்தன. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழிசையை அண்ணாமலை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது சந்திப்பு தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்," இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது" என்றார்.