தமிழ்நாடு

தனியார் பள்ளிகளுக்கு அரசு செலவில் பாராட்டு விழா நடத்துவதா?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published On 2024-07-14 07:37 GMT   |   Update On 2024-07-14 07:37 GMT

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 3,949 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தப்பட இருப்பதாக தனியார் பள்ளிகள் இயக்ககம் அறிவித்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. இதுவரை இல்லாத வகையில் தனியார் பள்ளிகளுக்கு அரசே பாராட்டு விழா நடத்துவது தேவையற்றது; நியாயமற்றது. தனியார் பள்ளிகளுக்கு வலிந்து சலுகை காட்டும் நோக்கத்துடன் தான் இந்த பாராட்டு விழா நடத்தப்படுகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கான பாராட்டு விழாவை வேறு சில நிகழ்ச்சிகளுடன் இணைத்து ஐம்பெரும் விழாவாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அரசு நடத்தியது. அதில் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

    ஆனால், தனியார் பள்ளிகளுக்கான பாராட்டு விழாவில் பள்ளி முதல்வர்கள், பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி பள்ளி முதலாளிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது சாதனை அல்ல. தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை எட்டுவது எளிதான ஒன்று தான். தனியார் பள்ளிகளுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் அளிப்பதன் பின்னணியில் ஏதோ உள்ளது. அது என்னவென்று தி.மு.க. அரசை அறிந்தவர்களுக்கு நன்றாக புரியும். தனியார் பள்ளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து பாராட்டு விழா நடத்த வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. அதற்கு தனியார் பள்ளிகள் தகுதியானவையும் இல்லை.

    இன்று தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்கினர் தனியார் பள்ளிகளில் பயிலும் அவலம் நிலவுகிறது. மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் பயில்கின்றனர். இது அரசின் பெரும் தோல்வி ஆகும். இத்தகைய சூழலில் தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்துவது அரசின் தோல்விக்கு விழா எடுப்பதற்கு ஒப்பானதாகும். அந்த தவறை தமிழக அரசு செய்யக்கூடாது.

    இத்தகைய விழாக்களை நடத்துவதை விட்டுவிட்டு அதற்காக செய்யப்படும் செலவில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் 4-ந்தேதி நடைபெறவுள்ள பாராட்டு விழாவை ரத்து செய்து விட்டு, அதற்கான ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதுடன், அவர்களுக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Tags:    

    Similar News