ஆம்ஸ்ட்ராங் வழக்கு: ஆற்காடு சுரேசின் தம்பி உள்பட 3 பேரை மீண்டும் காவலில் எடுக்க முடிவு
- அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
- 3 பேரிடம் கூடுதல் தகவல்களை திரட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, அருள் என 11 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதனை அடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட 11 பேரையும் பூந்தமல்லி சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்று ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தான் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மீதமுள்ள 10 பேரிடமும் விசாரணை முடிக்கப்பட்டு நேற்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு போலீசார் மீண்டும் ஆஜர்படுத்தினர். பின்னர் அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு மற்றும் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த திருமலை மற்றும் அருள் ஆகிய 3 பேரிடம் கூடுதல் தகவல்களை திரட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக புதியதாக எழும்பூர் கோர்ட்டில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.