நாளை ராணுவம் அணிவகுப்பு: லாட்ஜுகளில் தங்கியுள்ள வெளிமாவட்ட பிரமுகர்களை வெளியேற்ற நடவடிக்கை
- வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் அணிவகுப்பு நடக்கிறது.
- பாதுகாப்புக்காக செல்ல 450 ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
சென்னை:
பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுப் போட வர வேண்டும் என்பதற்காக போலீஸ் அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.
சென்னையில் பதட்டமான, மிக பதட்டமான வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் மக்கள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதற்காக போலீஸ் அணிவகுப்பு நாளை மாலை மற்றும் 18-ந்தேதி மாலை நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் பயப்படாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி முக்கிய வீதிகள், தெருக்களில் துணை ராணுவப் படையினர் அணி வகுத்து செல்கிறார்கள். 190 துணை ராணுவப் படையினர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் துப்பாக்கியுடன் நகரின் பதட்டமான பகுதிகளில் அணிவகுப்பு நடத்துகின்றனர்.
அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் அணிவகுப்பு நடக்கிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் அணிவகுப்பு நடக்கிறது.
இது தவிர சென்னையில் பாரிமுனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், ஆயிரம்விளக்கு, பெரிய மேடு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜுகளில் வெளி மாவட்ட நபர்கள் தங்கி உள்ளவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
அரசியல் பிரமுகர்கள் தங்கி இருந்தால் அவர்கள் நாளை மாலையில் இருந்து வெளியேற வேண்டும் என லாட்ஜ் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழில் ரீதியாக தங்குபவர்கள் அதற்கான ஆவணங்களை கொடுக்க வேண்டும்.
வெளி மாநிலங்களை சார்ந்தவர்கள் யார்-யார் தங்கி உள்ளனர்? சந்தேகப்படும்படி யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்று போலீசார் தங்கள் பகுதியில் உள்ள விடுதிகளில் கணக்கெடுத்து வருகின்றனர்.
தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 3,726 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.
பாதுகாப்புக்காக செல்ல 450 ரோந்து வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த ரோந்து வாகனங்களில் பணியாற்றும் போலீசார் எப்படி செயல்பட வேண்டும்? என்பது பற்றிய பயிற்சி நேற்று இரவு அளிக்கப்பட்டு உள்ளது.