முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக கைது: பொள்ளாச்சி அ.தி.மு.க பிரமுகர் ஜெயிலில் அடைப்பு
- போலீசார், அ.தி.மு.க. பிரமுகரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
- வருகிற 17-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் அருண்குமார்.
இவர் பொள்ளாச்சி 18-வது தகவல் தொழில்நுட்ப பிரிவு அ.தி.மு.க செயலாளராக உள்ளார். இந்நிலையில் இவர், முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து, பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்த தி.மு.க பிரமுகரான ஷானவாஸ் என்பவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார், அ.தி.மு.க. பிரமுகரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் அருண்குமார் மீது அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
அ.தி.மு.க பிரமுகர் கைது செய்யப்பட்டது அறிந்ததும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட ஏராளமான அ.தி.மு.கவினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜபாண்டியன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் அ.தி.முக.வினர், அருண்குமாரை விடுவிக்கும் வரை போலீஸ் நிலையத்தை விட்டு செல்லமாட்டோம் என்று கூறினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அ.தி.மு.கவினர் கலைந்து சென்றனர். இதையடுத்து, அ.தி.மு.க. பிரமுகர் அருண்குமாரை போலீசார் பொள்ளாச்சி ஜே.எம். 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவரை வருகிற 17-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அருண்குமாரை போலீசார் பொள்ளாச்சி சப்-ஜெயிலில் அடைத்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
கைது செய்யப்பட்ட அருண்குமார் பொள்ளாச்சி 18-வது தகவல் தொழில்நுட்ப செயலாளராக உள்ளார்.
இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வந்த வீடியோவை மறுபதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பதிவேற்றம் செய்தவர்கள் மீது வழக்குப்பதியாமல், அருண்குமார் மீது பொய் வழக்கு போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.