தமிழ்நாடு

நண்பர்கள் ஆட்டு கிடா, நாட்டு நாய், கோழி உள்ளிட்டவைகளை வழங்கிய காட்சி. 

திருமண விழாவில் வினோதம்: திருமண மாப்பிள்ளைக்கு ஆட்டு கிடா- சண்டை சேவல் வழங்கிய நண்பர்கள்

Published On 2023-06-08 05:24 GMT   |   Update On 2023-06-08 05:24 GMT
  • திருமண மாப்பிள்ளையான சிவா சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.
  • பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக திருமண பரிசாக வழங்கினோம்.

திருச்சுழி:

திருமணம் என்றாலே மணமக்களுக்கு அவர்களது சொந்த பந்தங்கள், நண்பர்கள், திருமணத்திற்கு வருபவர்கள் சீர்வரிசை பொருட்கள் மற்றும் பரிசுகள் வழங்குவது வழக்கம். உறவினர்களை பொறுத்தவரை கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்றவைகளை மணமக்களுக்கு சீர் வரிசைகளாக வழங்குவார்கள்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையிலும், திருமண மாப்பிள்ளைக்கு பிடித்ததுமான சண்டை கிடாய்கள், சேவல்கள், நாட்டு இன நாய்கள் போன்றவைகளை சீர் வரிசைகளாக அவரது நண்பர்கள் வழங்கினர். திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியடைய செய்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மகன் சிவா. இவருக்கும், இருஞ்சிறை பகுதியை சங்கரலிங்கம் மகள் துர்கா என்பவருக்கும் நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கரைமேல் முருகன் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது.

தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகள், சண்டைக்கிடாய்கள், நாட்டு இன ரக நாய்கள் என பல்வேறு விலங்குகளை ஏராளமானோர் ஆர்வமு டனும், பாசத்துடனும் வளர்த்து வருகின்றனர்.திருமண மாப்பிள்ளையான சிவாவும் சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.

இந்த நிலையில் அவருக்கு திருமணம் நடந்தததால், சண்டை கிடாய்கள், சண்டை சேவல், நாட்டு இன நாய் உள்ளிட்டவைகளை அவரது நண்பர்கள் பரிசு பொருட்களாக வழங்கினர். அவர்கள் 2 சண்டை ஆட்டு கிடாய்கள், 5 சண்டை சேவல்கள், நாட்டு ரக இனத்தை சார்ந்த கன்னி, சிப்பிப்பாறை நாய்கள் ஆகியவற்றை வழங்கினர்.

அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் அவர்கள் பரிசாக வழங்கிய சண்டை கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக நாய்கள் உள்ளிட்டவைகளுடன் மணமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து மாப்பிள்ளையின் நண்பர்கள் கூறும் போது, "தமிழர்களின் வீர விளையாட்டு போட்டிகளான அழிந்து வரும் நிலையில் உள்ள ஆட்டு கிடாய் சண்டை, சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக அவர் விரும்பி வளர்த்து வரும் சண்டை ஆட்டு கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக இன நாய் ஆகியவற்றை திருமண பரிசாக வழங்கினோம்" என்றனர்.

Tags:    

Similar News