அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: பா.ஜ.க. போராட்டம் கைவிடப்படுகிறது -அண்ணாமலை
- விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
- தமிழக பா.ஜ.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை:
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021-ம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும், அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. தமிழகத்தில், பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன.
அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் தலையாய பணி. ஆனால், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் கடந்தும், தி.மு.க. அரசு, இதுவரை, தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க வில்லை.
இனியும் தாமதிக்காமல், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டும். இதன் மூலம், தமிழக அணைகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தக் கடமைப்பட்டு உள்ளோம்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றத் தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல், தமிழக பா.ஜ.க. சார்பில், தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். தற்போது, நாளை (ஆக. 17-ந் தேதி திட்டத்தைத் தொடங்கி வைப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
எங்கள் முக்கியக் கோரிக்கை நிறைவேறி இருப்பதால், தமிழக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் கை விடப்படுகிறது.
எனினும், விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரையில், தமிழக பா.ஜ.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.