மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து: பெண் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் உயிரிழப்பு
- மோட்டார் சைக்கிளோடு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, பெண் போலீஸ் நித்யா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
- பலியான பெண் போலீஸ்காரர் நித்யாவின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி கிராமம் ஆகும்.
செங்கல்பட்டு:
சென்னை புளியந்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெயஸ்ரீ (வயது 38). இவர் ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட மாதவரம் பால் பண்ணை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் அதே போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்த நித்யா (33) என்பரை அழைத்து கொண்டு நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் மேல்மருவத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, திருவண்ணாமலை நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று திடீரென இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்னால் எதிர்பாராத வகையில் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளோடு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, பெண் போலீஸ் நித்யா ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த காரும் கவிழ்ந்து சாலையில் உருண்டது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள் மேல்மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து காவலர் நித்யா, கார் டிரைவர் அன்பழகன் ஆகியோரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவலர் நித்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள குள்ளக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் அதிவேகமாக காரை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீயின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் கூடல்புதூர் ஆகும். இவரது கணவர் ஜான். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் விகாஷ் என்ற மகனும். 6-ம் வகுப்பு படித்து வரும் விக்க்ஷிதா என்ற மகளும் உள்ளனர்.
பலியான பெண் போலீஸ்காரர் நித்யாவின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி கிராமம் ஆகும். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீயும், நித்யாவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்ததால் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் விபத்தில் போலீஸ்காரர்கள் இருவரும் பலியான சம்பவம் போலீஸ் அதிகாரிகளிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.