சங்கராபுரம் பஸ் நிலையத்தில் ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி: 2 கடைகளில் ரூ.30 ஆயிரம் திருட்டு
- ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாமல் திணறிய கொள்ளையர்கள் வெளியில் வந்தனர்.
- கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் திருடிவிட்டு, கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இதன் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் பல்வேறு கடைகள் செயல்படுகின்றன.
இரவு 10 மணிக்கு மேல் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வராது என்பதால் அங்குள்ள கடைகளை மூடிவிட்டு அதன் உரிமையாளர் வீட்டிற்கு சென்று விடுவார்கள்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்றிரவு 11 மணிக்கு மேல் தனியார் வங்கி ஏ.டி.எம்.மிற்கு வந்துள்ளனர். அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாமல் திணறிய கொள்ளையர்கள் வெளியில் வந்தனர்.
அருகில் இருந்த பழக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரத்து 700 பணத்தை திருடினர். மேலும், அங்கிருந்த ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை எடுத்து சாப்பிட்டுள்ளனர்.
கொள்ளையர்களின் தேவை அதிகமாக இருந்ததால், பழக்கடைக்கு அருகில் இருந்த பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து அதனுள் நுழைந்தனர். அந்த கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் திருடிவிட்டு, கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை பணம் எடுக்க ஒரு சிலர் ஏ.டி.எம்,மிற்கு வந்தனர். அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி நடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து பஸ் நிலைய பகுதியில் இருந்த கடை உரிமையாளர்கள் அனைவரும் விரைந்து வந்து, தங்கள் கடைகளில் திருட்டு ஏதேனும் நடந்ததா என சோதனை நடத்தினர்.
அப்போது பழக்கடை மற்றும் பல்பொருள் அங்காடி ஆகியவற்றின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள் இது குறித்து சங்கராபுரம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் போலீசார், முதலில் ஏ.டி.எம். மையத்தில் சோதனை நடத்தினர். தொடர்ந்து பழக்கடை, பல்பொருள் அங்காடிகளில் சோதனை நடத்தினர். அப்போது பழக்கடை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி சென்றதை கண்டனர்.
இதையடுத்து விழுப்புரத்தில் இருந்த கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும், தனியார் ஏ.டி.எம். நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்தனர். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சங்கராபுரத்தின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள பஸ் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்,மில் கொள்ளை முயற்சி, அருகில் உள்ள 2 கடைகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.