அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மகன்-பேரன் மீது தாக்குதல்: 6 பேர் கும்பலை போலீஸ் தேடுகிறது
- ஆவேசமாக கூச்சல் போட்டும் இடையூறு செய்து கொண்டிருந்தனர்.
- தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வருகிறார்கள்.
சென்னை:
தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரனின் மகன், பேரன் உள்பட குடும்பத்தினர் தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தியேட்டருக்கு நேற்று இரவு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்-2 என்ற படம் பார்க்க சென்றுள்ளார்கள்.
இரவு 10.50 மணிக்கு காட்சி தொடங்கியது. படம் ஓடிக் கொண்டிருந்த போது அவர்களுக்கு பின் இருக்கையில் அமர்ந்து இருந்த 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் காட்சிகளை பார்த்து விசில் அடித்தும், ஆவேசமாக கூச்சல் போட்டும் இடையூறு செய்து கொண்டிருந்தனர். உடனே அமைச்சரின் குடும்பத்தினர் அவர்களிடம் அமைதியாக இருங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று அமைச்சரின் மகன் ரமேஷ் (50) பேரன் கதிர் ஆகியோர் மீது தாக்கி இருக்கிறார்கள். இதனால் கதிருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
உடனே தியேட்டர் நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். அந்த தருணத்தை பயன்படுத்தி அவர்கள் 6 பேரும் தியேட்டரில் இருந்து தப்பி சென்றுவிட்டார்கள்.
காயம் அடைந்த கதிர் உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதிகாலை 4 மணியளவில் அவர் வீடு திரும்பினார்.
இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வருகிறார்கள்.