தமிழ்நாடு (Tamil Nadu)

கைலி அணிந்து அரசு பஸ்சை ஓட்டிய ஆட்டோ டிரைவர்- நண்பரின் ஆசைக்காக அனுமதித்தவர் சஸ்பெண்டு

Published On 2022-07-26 04:20 GMT   |   Update On 2022-07-26 04:20 GMT
  • பாண்டி விஸ்வநாதனின் ஒப்புதலுடன் பஸ்சில் டிரைவர் சீட்டில் அமர்ந்த சரவணன் கைலியுடனே சுமார் 7 கி.மீ தூரம் வரை பஸ்சை ஓட்டி உள்ளார்.
  • தேனி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சத்தியமூர்த்திக்கு புகார் வந்தது.

தேனி:

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக இருப்பவர் பாண்டி விஸ்வநாதன். கண்டக்டராக இருப்பவர் வினோத் குமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி - வீரபாண்டி சுற்றுச்சாலை நகர பஸ்சை இயக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது வீரபாண்டியில் அரசு பஸ் டிரைவரின் நண்பரான ஆட்டோ டிரைவர் சரவணன் என்பவர் கைலி அணிந்து பஸ்சில் ஏறினார். அவர் தான் அரசு பஸ்சை ஓட்ட வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

அதன்படி பாண்டி விஸ்வநாதனின் ஒப்புதலுடன் பஸ்சில் டிரைவர் சீட்டில் அமர்ந்த சரவணன் கைலியுடனே சுமார் 7 கி.மீ தூரம் வரை பஸ்சை ஓட்டி மகிழ்ச்சியடைந்தனர். இந்த காட்சியை பஸ்சில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இதுகுறித்து தேனி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சத்தியமூர்த்திக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து அரசு பஸ்சை வேறு ஒரு நபருக்கு ஓட்ட அனுமதி அளித்தது ஏன்? என பாண்டி விஸ்வநாதனிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தனது நண்பரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து அரசு பஸ்சின் டிரைவர் பாண்டி விஸ்வநாதன், கண்டக்டர் வினோத்குமார் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News