தமிழ்நாடு (Tamil Nadu)

ஆயுத பூஜை விடுமுறை- சென்னையில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு

Published On 2024-10-08 06:03 GMT   |   Update On 2024-10-08 06:03 GMT
  • ஆயுத பூஜை விடுமுறையையொட்டி அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
  • சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னை:

ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகையை வியாபாரிகளும், தொழிலாளர்களும் மட்டுமின்றி பொதுமக்களும் கொண்டாடுவது வழக்கம். வருகிற 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆயுத பூஜை என்பதால் அரசு விடுமுறையாகும். மறுநாள் சனிக்கிழமை விஜயதசமியும் அதனை தொடர்ந்து 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறையும் வருவதால் 3 நாட்கள் அரசு விடுமுறை கிடைக்கிறது.

தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் இருந்து நாளையும் மறுநாள் வியாழக்கிழமையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 2092 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும். நாளை (புதன்கிழமை) அவற்றுடன் கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் 10-ந் தேதி பயணம் மேற்கொள்வதால் அன்று 2000 சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:-

ஆயுதபூஜை விடுமுறையையொட்டி அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை பயணத்திற்கு 13 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 10-ந் தேதி பயணம் செய்ய மொத்தம் 31 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து காத்து இருக்கிறார்கள். இதில் சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

364 அரசு விரைவு பஸ்களுக்கும் 40 பிற போக்குவரத்துக் கழக பஸ்களுக்கும் முன்பதிவு நடக்கிறது. நீண்ட தூரம் செல்லக்கூடியவர்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டால் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News