ஆயுத பூஜை தொடர் விடுமுறை- சென்னையில் இருந்து 4 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கம்
- தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் வெளியூர்களுக்கு செல்பவர்கள், பஸ், ரெயில்களில் நேற்று முதல் பயணத்தை தொடங்கி விட்டனர்.
- தீபாவளிக்கு இன்னும் 2 வாரம் இருப்பதால் முன்பதிவு மேலும் அதிகரிக்கும்.
சென்னை:
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் நாளை (வெள்ளிக்கிழமை)யும் அதனை தொடர்ந்து சனிக்கிழமையும் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு பொது விடுமுறை நாளாகும். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் வெளியூர்களுக்கு செல்பவர்கள், பஸ், ரெயில்களில் நேற்று முதல் பயணத்தை தொடங்கி விட்டனர்.
பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டதால் இன்று வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இன்று காலை முதல் இயக்கப்படுகிறது.
கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் வழக்கமாக இயக்கப்படும் 2024 பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக 2 ஆயிரம் பஸ்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று பயணம் செய்ய 41 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல மட்டும் 24 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அவற்றில் பயணம் செய்ய 34 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.
சென்னைக்கு வருவதற்கு மட்டும் 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். விடுமுறை முடிந்து சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயணம் செய்ய அதிகளவில் முன்பதிவு நடப்பதாக அதிகாரி தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை இந்த மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாட இருப்பதால் 29, 30 ஆகிய இரண்டு நாட்களுக்கு பயணம் செய்ய 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளிக்கு இன்னும் 2 வாரம் இருப்பதால் முன்பதிவு மேலும் அதிகரிக்கும்.
தீபாவளி சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படுவது குறித்து வருகிற 15-ந் தேதி அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசாருடன் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு சிறப்பு பஸ்கள் எத்தனை நாட்கள் இயக்கப்படுகிறது. எந்தெந்த நாட்களில் இயக்கப்படுகிறது. இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை என்ன? சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் எத்தனை என்பது போன்ற விவரங்களை அமைச்சர் அறிவிக்கிறார்.
இந்த ஆண்டு கிளாம்பாக்கத்தில் இருந்து பெரும்பாலான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் அங்கு செல்வதற்கு தேவையான இணைப்பு பஸ்கள் குறித்தும் அறிவிப்பு வெளியாகும்.