வங்காளதேச வன்முறை: மத்திய அரசு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்- ஜி.கே. வாசன்
- போராட்டக்காரர்களை கண்டதும் சுடுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கு அரசு உத்தரவிட்டது.
- இடஒதுக்கீட்டை ஆளும் ஹசீனாவின் அரசு ரத்து செய்துள்ளது.
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து இளைஞர்களால் கடந்த வாரம் முதல் கடுமையான போரட்டம் முன்னெடுக்கப்பட நிலையில் போராட்டம் கலவரமாக மாறி பல வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த வன்முறையில் 133 க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்களை கண்டதும் சுடுவதற்கு அந்நாட்டு ராணுவத்துக்கு அரசு உத்தரவிட்டது . இந்நிலையில் இடஒதுக்கீட்டை ஆளும் ஹசீனாவின் அரசு ரத்து செய்துள்ளது.
இருப்பினும் போரட்டம் இன்னும் அடங்காத நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறியிருப்பதாவது,
மத்திய மாநில அரசுகள் வங்கதேசத்தில் உள்ள தமிழகமாணவர்களை தமிழ்நாட்டிற்கு பத்திரமாக அழைத்து வர தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதன் காரணமாக இந்திய மாணவர்கள் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள்.
மத்திய அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இந்திய மாணவர்களை பத்திரமாக அவரவர் மாநிலத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.
குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு கல்வி பயின்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்று கூறியுள்ளார்.