திருமண வீட்டில் நகைகளை திருடிய 'பியூட்டிஷியன்' கைது
- அதிர்ச்சி அடைந்த இமானுவேல் விஜயன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.
- குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் சங்கரியை பிடித்து விசாரணை நடத்தினர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜர் புரத்தை சேர்ந்தவர் இமானுவேல் விஜயன் (வயது 55). தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.
இவரது மூத்த மகனுக்கு கடந்த அக்டோபர் 20-ந் தேதி கோவையில் வைத்து திருமணம் நடைபெற்றது. வரவேற்பு விழா 22-ந் தேதி ஆறுமுகநேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்காக திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் என்பவரின் மனைவி சங்கரி(27) என்பவர் மண்டபத்திற்கு வந்திருந்தார்.
பின்னர் சங்கரி மணமகனின் உறவினர் பெண் ஒருவருக்கு மேக்கப் போடுவதற்காக மற்றொறு அறைக்கு சென்றார். அப்போது அந்த பெண்ணிடம் நகைகளை கழற்றி வைக்குமாறு கூறியுள்ளார். அதனை அந்த பெண்ணும் கழற்றி ஒரு பையில் வைத்துள்ளார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அந்த அறைக்கு சென்று நகையை பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. அந்த பையில் ரூ.3.17 லட்சம் மதிப்பிலான 61 கிராம் நகைகள் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இமானுவேல் விஜயன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் சங்கரியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் நகைகளை திருடியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சங்கரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த நகைகளை மீட்டனர்.