இரவில் தனியாக நடந்து சென்ற பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த "பைக் டாக்சி" டிரைவர்
- சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை போலீசார் கண்டு பிடித்தனர்.
- இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக ‘காவலன்’ செயலி உள்ளது.
சென்னை:
சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அந்த புகாரில், 'எனது 13 வயது மகள் கடந்த 17-ந்தேதி இரவில் டியூசனுக்கு சென்று விட்டு வீட்டுக்கு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் எனது மகளை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். என் மகளிடம் தவறாக நடந்த அந்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சக்தி வேலாயுதம் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த தெருவில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியிடம் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் சில்மிஷம் செய்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த மோட்டார் சைக்கிளின் எண் சரியாக தெரியாததால் போலீசார் சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர்.
அப்போது சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை போலீசார் கண்டு பிடித்தனர். அதை வைத்து விசாரனை நடத்தியபோது அந்த மோட்டார்சைக்கிள் டி.பி.சத்திரம் பூஜ்ஜி தெருவை சேர்ந்த யோகேஸ்வரன் (வயது24) என்பவருக்கு சொந்தமான மோட்டார்சைக்கிள் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அவர்தான் என்று தெரியவந்தது. இதையடுத்து யோகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, புகார் செய்த சிறுமி உள்பட இரவில் தனியாக நடந்து சென்ற 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-
யோகேஸ்வரனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லை. அவர் ஏற்கெனவே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் அவரை பணியில் இருந்து நீக்கி உள்ளனர். அதன் பிறகு அவர் கடந்த 6 மாதமாக பைக்டாக்சி ஓட்டினார். இரவில் பைக்டாக்சி ஓட்டினால் போனஸ் அதிகமாக கிடைக்கும், சாலையும் வெறிச்சோடி இருக்கும் என்பதால் அவர் இரவு நேரத்தில் பைக் டாக்சி ஓட்டி வந்தார்.
இரவில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் இளம்பெண்களை பைக் டாக்சியில் இவர் ஏற்றி செல்லும்போது, அவர்களை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது சில பெண்கள் இவரை கண்டித்துள்ளனர். அப்படி கண்டிக்கும் பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்டு விட்டு நைசாக தப்பி விடுவார். சில்மிஷத்தில் ஈடுபடும்போது கண்டு கொள்ளாத பெண்களுக்கு அவ்வப்போது செல்போனில் மெசேஜ் அனுப்பி நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.
மேலும் இரவில் பைக் டாக்சி ஓட்டும்போது நள்ளிரவில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை நோட்டமிட்டு அவர்களை பின் தொடர்ந்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இது பற்றி வெளியில் சொன்னால் உங்களுக்குத்தான் பிரச்சனை என்று மிரட்டியுள்ளார். இதனால் அவர் மீது எந்த பெண்களும் புகார் செய்யவில்லை.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இரவில் தனியாக செல்லும் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுபோல இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அவர் 50-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில் அவர் தனது தாயாரிடம் தெரிவித்ததால் யோகேஸ்வரன் தற்போது போலீசில் சிக்கிக்கொண்டார்.
இந்த வழக்கு டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் இருந்து தற்போது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து யோகேஸ்வரனை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கைதான யோகேஸ்வரன் இரவில் பணி முடிந்து பைக் டாக்சியில் சென்ற பெண்களிடமும், சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்களிடமும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.
அவர் மீது இதுவரை ஒரே ஒரு சிறுமி மட்டுமே புகார் செய்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் செய்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக 'காவலன்' செயலி உள்ளது. இந்த செயலியை பெண்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் இதுபோன்ற வாலிபர்களால் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தால் உடனடியாக காவலன் செயலியை பயன்படுத்தி போலீசை உதவிக்கு அழைக்கலாம்.
பைக் டாக்சியில் முன்பதிவு செய்து செல்லும் பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முன்பதிவு செய்யும்போது அந்த டிரைவரின் செல்போன் எண், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பப்பட்டு இருக்கும் என்பதால் அதுபோன்ற நபர்களை எளிதில் பிடித்து விட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.