டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ்: 21 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை
- தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
- பண்டிகை நாட்களில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:
தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் எத்தனை சதவீதம் வழங்க வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தை சென்னையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர் முன்னேற்ற சங்கம், டாஸ்மாக் தொழிலாளர் அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் நிரந்தர பணியாளர் சங்கம், விற்பனையாளர்கள் சங்கம் உள்பட 21 தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்றன.
இதில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் கொடுத்திருந்த கோரிக்கையில், டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அது மட்டுமின்றி பண்டிகை நாட்களில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல் ஒவ்வொரு சங்க பிரதிநிதிகளும் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இவற்றை அமைச்சர் முத்துசாமி பெற்றுக் கொண்டு, ஒவ்வொரு சங்கங்களின் கோரிக்கையையும் கவனமுடன் பரிசீலித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று போனஸ் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.