2 கடிதங்களிலும் இருப்பது ஜெயக்குமார் கையெழுத்து தான்- தடய அறிவியல் நிபுணர்கள் உறுதி
- ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் எழுதியதாக 2 கடிதங்கள் வெளிவந்தது
- கடித்தில் உள்ள கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பார்த்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் இறந்து 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது சாவு வழக்கில் இதுவரை உறுதியான ஒரு முடிவை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
பல்வேறு கோணங்களில் விசாரணையை நகர்த்தி வரும் சூழ்நிலையில் கொலையா? அல்லது தற்கொலையா? என்று உறுதியான முடிவுக்கு வரமுடியாமல் போலீசார் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் எழுதியதாக 2 கடிதங்கள் வெளிவந்தது. அதில் ஒன்று கடந்த 30-ந்தேதி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எனவும், மற்றொரு கடிதம் 27 மற்றும் 30-ந்தேதி என குறிப்பிடப்பட்டு அவரது மருமகனுக்கும், குடும்பத்தாருக்கும் என்றும் எழுதியதாக வெளிவந்தது
இந்த 2 கடிதங்களையும் அவர், தன் கைப்பட எழுதினாரா அவரது கையெழுத்து தானா என்று போலீசார் உறுதி படுத்துவதற்காக அதனை தடய அறிவியல் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த கடிதத்தை ஆய்வு செய்த நிலையில், அவரது பழைய கடிதங்களில் உள்ள எழுத்துக்களை இந்த கடித்தில் உள்ள கையெ ழுத்துடன் ஒப்பிட்டு பார்த்து அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தனர்.
அதில் 2 கடிதங்களையும் ஜெயக்குமார் தனது கைப்பட எழுதியுள்ளார் என்று தடய அறிவியல் அலுவலர்கள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.