தமிழ்நாடு (Tamil Nadu)

விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2024-08-14 09:34 GMT   |   Update On 2024-08-14 09:34 GMT
  • சென்னையில் இருந்து இன்று வெளியூர் செல்வதற்கு 15 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர்.
  • பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக கூடுதலாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை:

சுதந்திர தினத்தையொட்டி நாளை அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது. மறுநாள் வெள்ளிக்கிழமை ஒருநாள் அலுவலகங்களுக்கு விடுப்பு போடும் பட்சத்தில் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் வெளியூர் பயணம் செல்ல ஏற்கனவே திட்டமிட்டு பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பி விட்டன. அரசு விரைவு பஸ்களிலும் இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

சென்னையில் இருந்து இன்று வெளியூர் செல்வதற்கு 15 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்ல 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

வெளியூர் செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக இன்று கூடுதலாக 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி கூறுகையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்ல மக்கள் அதிகளவில் முன்பதிவு செய்து உள்ளார்கள்.

18-ந்தேதி வெளியூர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு வருவதற்கு அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக கூடுதலாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்வது அவசியம். கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களில் மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்க தயாராக உள்ளோம் என்றார்.

இதே போல சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களும் இன்று காலை நிலவரப்படி 70 சதவீதம் நிரம்பியுள்ளன. மாலையில் கூட்டம் அதிகரிக்கும்போது இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News