திருப்பதி லட்டு சாப்பிட்டவர்கள் உயிரோடு தானே இருக்காங்க? சீமான்
- நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.
- இதை ஒரு நாட்டின் பிரச்சினையாக கொண்டு போக வேண்டாம்.
திருப்பதி கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை கலந்திருந்த சம்பவம் பூதாகாரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், லட்டு விவகாரம் பற்றிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து பேசும் போது, "லட்டு தயாரித்த நிறுவனத்தை தான் கேட்க வேண்டும். நாட்டில் இதுதான் பிரச்சினையா, சாப்பிட்ட அனைவரும் உயிருடன் தானே இருக்கிறார்கள். அதில் எதுவும் பிரச்சினை இல்லை தானே. இனிமேல் அப்படி தயாரிக்க வேண்டாம் என்று கூறலாம். முன்பு ஒப்பந்தம் கொடுத்தவருக்கு, அதனை நீக்கிவிட்டு வேறு வேளையை பார்க்கலாம். இதை ஒரு நாட்டின் பிரச்சினையாக கொண்டு போக வேண்டாம்."
"ஆட்சியில் இருப்பவர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினையே இங்கு ஏராளமாக உள்ளது. அதை பற்றி ஏன் பேச மறுக்கின்றீர்கள். லட்டு அப்படி தயாரிக்க கூடாது எனில், அதை தயாரித்தவர்களிடம் தான் விசாரிக்க வேண்டும். ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட நிறுவனத்திடம் தான் இதுபற்றி கேட்க வேண்டும்," என்று தெரிவித்தார்.